தலையில் சமுதாய கொடி கட்டி ஆட மாட்டேன் பகிரங்க மன்னிப்பு
																																		மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த 29 வயதான பிரபல கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரி . இவர் தான் ஆடும் வீடியோக்களை யூட்யூபில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவராக வலம் வந்தார்.
பரமேஸ்வரி இல்லாத கரகாட்ட நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு நிலைமை உருவானது. இதனால் மற்ற கரகாட்ட கலைஞர்கள் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பரமேஸ்வரி மீது மற்ற கலைஞர்கள் அனைவரும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் தனியார் பத்திரிக்கை ஒன்று கலைக்கு உயிர் கொடுத்த பரமேஸ்வரி என்று பட்டம் கொடுத்து செய்தி வெளியிட்டது. இந்த நிகழ்வு தான் பெரும் பூகம்பத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தது.
இதனை எதிர்த்த கரகாட்ட குழு சங்கம் பரமேஸ்வரிக்கு கொடுத்த இந்த பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கரகாட்ட குழு சங்கத்தினர் பரமேஸ்வரி கரகாட்டம் ஆடுவதாக கூறி கவர்ச்சி நடனம் ஆடுவதாகவும்,
ஒவ்வொரு கிராமங்களுக்கும் நிகழ்ச்சிக்காக செல்லும்போது அந்த கிராமத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தின் கொடியை தலையில் கட்டி ஆடுவதாகவும் இதனால் தாங்கள் வேறு நிகழ்ச்சிக்கு செல்லும்போது அங்குள்ள மக்கள் சமுதாய கொடி கட்டி ஆட சொல்வதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் கரகத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவர் பரமேஸ்வரி என்றும் அரைகுறை ஆடை அணிந்து சினிமா பாட்டிற்கு ஆடும் நடனத்தை பல யூடியூபில் சேனல்களில் பதிவிட்டு பிரபலம் அடைந்து வருமானம் ஈட்டுவதாகவும் இதனால் கரகாட்ட கலையை கேவலப்படுத்துவதாக குற்றச்சாட்டை அடுக்கிக் கொண்டே சென்றனர்.
இவர்கள் செய்தியாளர்களை சந்தித்த அதே வேலையில் பரமேஸ்வரி மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கரகாட்ட சங்கத்தைச் சார்ந்த சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து இனிமேல் கரகாட்டம் ஆடக்கூடாது என மிரட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய பரமேஸ்வரி கரகத்திற்காக தான் உயிரையும் விடுவதாகவும், கணவனை இழந்த தனக்கு இந்த கரகாட்டம் மூலம் தான் தனது குடும்பத்தை கவனித்து வருவதாகவும் இதனை முடக்க சிலர் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
மேலும் தன்னை ஆபாசமாக பேசி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தன் மீது குறை சொன்ன பலரும் பல நேரங்களில் சமுதாயக் கொடியை கட்டி ஆடியதாகவும் தன்னை மட்டும் குறை சொல்வதாகவும் தெரிவித்தார்.
தான் ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருப்பதாகவும் அதனால் அந்த கட்சியின் கொடியை கட்டி ஆடியதாகவும் விளக்கம் தெரிவித்தார்.
இதனை அறிந்த கரகாட்ட குழு சங்கத்தினர் சில தினங்களுக்கு அடுத்து ஊர்வலமாக சென்று பரமேஸ்வரிக்கு எதிராக கோஷம் எழுப்பி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் பாரம்பரிய கலையான கரகாட்டத்தை பரமேஸ்வரி என்ற தனிநபர் கெடுத்து வருவதாகவும் அதனால் பரமேஸ்வரியை கரகாட்டம் ஆட தடை விதிக்க வேண்டும் என்று பல கோரிக்கையை விடுத்தனர்.
இப்படியாக பரமேஸ்வரிக்கும் கரகாட்ட குழு சங்கத்தினருக்கும் கீரியும் பாம்பும் போன்று மோதல் பல தினங்களாக நடந்து வந்தன. பரமேஸ்வரி தன் பங்கிற்கு பல யூடியூப் சேனல்களில் சென்று நேர்காணல் அளித்து அனுதாபத்தை தேடிக்கொண்டார்.
இதன் விளைவாக சமூக வலைதளங்கள் முழுவதும் பரமேஸ்வரிக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு அனைத்து கிராமிய கலைஞர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் முனைவர் சோமசுந்தரம் தலைமையில் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கிராமிய கலைஞர்களும் பங்கு பெற்றனர். இந்த கூட்டத்தில் பங்கு பெற்ற பரமேஸ்வரி தான் இனிமேல் ஒருபோதும் சமுதாயக் கொடியை தலையில் கட்டி ஆட போவதில்லை,
எனவும் அதுபோன்று சினிமா பாட்டிற்கு நடனம் ஆடப்போவதில்லை என உறுதி அளித்து சங்க உறுப்பினர்கள் அனைவர் முன்னிலையிலும் கண்கலங்கி பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
மேலும் தனக்கு பல பேர் கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் அவர்களைப் பற்றி தற்போது பேச விரும்பவில்லை என்றும் தனக்கு சொந்தமான பட்டாம்பூச்சி யூடியூப் சேனலில் மட்டுமே கரகாட்டம் சம்பந்தமான வீடியோக்களை பதிவிடுவதாகவும் உறுதி அளித்தார்.
கரகாட்ட சங்கத்தை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் திடீரென்று பரமேஸ்வரி கரகாட்ட சங்க உறுப்பினர்கள் அனைவரும் முன்னிலையிலும் பகிரங்க மன்னிப்பு கேட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இனிமேலாவது இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
        



                        
                            
