சமூர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டம்!
பொருளாதார பாதிப்பால் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் சமூர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
நாவல பகுதியில் நேற்று (24.06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் ’58 இலட்ச குடும்பங்களில் 11 இலட்ச குடும்பங்களின் ஒருநாள் வருமானம் 900 ரூபாவாக காணப்படுவதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் சுமார் 17 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் பல முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது. ஆளுந்தரப்பின் உறுப்பினர்களும் இந்த செயற்திட்டம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.
சமூக கட்டமைப்பில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள அஸ்வெசும செயற்திட்டம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.