கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடவேண்டாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு
கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக்கொண்டு, நாடளாவிய ரீதியில் நிதியியல் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கிறிப்டோ நாணயங்கள் இலங்கையில் சட்டபூர்வமான நாணயம் அல்ல என்பதுடன், நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தலும் பாதுகாப்புச்செயன்முறைகளும் நடைமுறையில் இல்லை.
எனவே இணையத்தளம் மற்றும் ஏனைய வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படும் கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடவேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது.
கிறிப்டோ என அழைக்கப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகளைக் கருத்திற்கொண்டு, அதுபற்றி விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மத்திய வங்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
கிறிப்டோ நாணயம் தொடர்பில் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கிறிப்டோ நாணயம் என்பது நாடொன்றில் அதிகாரசபையினாலன்றி, தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும். கிறிப்டோ வர்த்தகமானது சில நிறுவனங்களால் இலாபகரமான முதலீடொன்றாகப் பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றது.
இருப்பினும் பொதுமக்கள் தாம் மேற்கொண்ட கிறிப்டோ முதலீடுகளின் விளைவாகப் பாரிய நட்டத்துக்கு முகங்கொடுத்துள்ளமையையும், சில சந்தர்ப்பங்களில் கிறிப்டோவுடன் தொடர்புடைய திட்டங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதியியல் மோசடிகளால் பாதிக்கப்படுவதையும் அண்மையகாலங்களில் எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் ஊடாக அறியமுடிகின்றது.
கிறிப்டோ நாணயத்தைப் பயன்படுத்துவோருக்கு ஏற்படக்கூடிய நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட மற்றும் பாதுகாப்புசார் இடர்நேர்வுகள் குறித்து ஏற்கனவே 2018, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
உலகளாவிய ரீதியில் கிறிப்டோ நாணய வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் அண்மையில் முறிவடைந்துள்ளன. எனவே இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிப்டோ நாணயங்கள் சொத்து வகுப்பொன்றாக அங்கீகரிக்கப்படாத, ஒழுங்குமுறைப்படுத்தப்படாத முதலீட்டு சாதனங்கள் என்பதைப் பொதுமக்களுக்கு நினைவுறுத்துகின்றோம்.
மேலும் கிறிப்டோ நாணயங்கள் இலங்கையில் சட்டபூர்வமான நாணயம் அல்ல என்பதுடன், நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தலும் பாதுகாப்புச்செயன்முறைகளும் நடைமுறையில் இல்லை.
மத்திய வங்கியின் வெளிநாட்டுச்செலாவணி சட்டத்தின் பிரகாரம் கிறிப்டோ நாணயக் கொள்வனவின்போது பற்று அட்டை மற்றும் கடனட்டை போன்ற இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
கிறிப்டோ நாணயம் முறைசார வழிகளுடாகத் தொழிற்படுவதனால், அது தேசிய பொருளாதாரத்துக்குப் பங்களிப்பதில்லை என்பதுடன் நாட்டின் பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயத்தையும் இழக்கநேரிடுகின்றது.
கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக்கொண்டு, பெருமளவான நிதியியல் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துவருவது குறித்துப் பொதுமக்களுக்கு எச்சரிக்கின்றோம்.
அதுமாத்திரமன்றி கடுமையாகப் பாடுபட்டு உழைத்த பணத்தைப் பாதுகாக்குமாறும், இணையத்தளம் மற்றும் ஏனைய வழிமுறைகளின் ஊடாக வழங்கப்படும் கிறிப்டோ நாணயத்திட்டத்தில் முதலிடாமல் இருக்குமாறும் பொதுமக்களுக்கு வலுவாக அறிவுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.