கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போன சிறுமியைத் தேடும் முயற்சிகள் புயல் காரணமாக தடை
பிரித்தானியாவில் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஏழு வயது சிறுமியைத் தேடும் முயற்சிகள், புயல் காரணமாக தடைபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
லங்காஷயர் (Lancashire) பிளாக்பர்னைச் (Blackburn) சேர்ந்த இனாயா மக்தா (Inaya Makhta), புதன்கிழமை மொராக்கோவின் (Morocco) காசாபிளாங்கா (Casablanca) கடற்கரையில் உள்ள பாறைகளில் அமர்ந்திருந்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இனாயா மக்தாவின் குடும்பத்திற்கு உடனடி ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக
பிளாக்பர்ன் நாடாளுமன்ற உறுப்பினர் அட்னான் ஹுசைன் (Adnan Hussain, MP) தெரிவித்துள்ளார்.
“இந்த பேரழிவின்போது இனாயாவின் குடும்பத்திற்கு ஆதரவையும் ஒற்றுமையையும் வழங்கியதற்காக பிளாக்பர்ன் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஒரு வார விடுமுறையின் முதல் இரவில் குடும்பத்தினர் கடற்கரையில் இருந்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டது. .
இந்நிலையில், காசாபிளாங்காவில் இன்னும் இருக்கும் பெற்றோருக்கான தனிப்பட்ட தேடல் மற்றும் அவசர குடும்பச் செலவுகளுக்காக GoFundMe முறையீடு தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை £60,000 க்கும் அதிக நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





