இலங்கை முழுவதும் நீர் தடை ஏற்படும் அபாயம் – விடுக்க்பபட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை பூராகவும் நீர் விநியோக நடவடிக்கையை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்போம் என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தை பாரிய போராட்டமாக மாற்றி, நீர் விநியோக நடவடிக்கையை இடைநிறுத்துவோம் என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக அதன் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
சுகயீன விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் அந்த தினங்களில் பணியாற்றியமைக்கான கொடுப்பனவை 10 நாட்களுக்குள் வழங்குமாறு எமது தொழிற்சங்கம் கடந்த 3 ஆம் திகதி நீர்வழங்கல் அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளித்தது.
என்றாலும் எமது இந்த சாதாரண கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த கவனமும் செலுத்தப்படாமல் இருக்கிறது. அதனால் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை தவிர, அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகிக்கொண்டோம். நிர்வாக சேவை அதிகாரிகளால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை வழங்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம்.
ஆனாலும் குறைந்த பட்சம் நீர்வழங்கல் சபை தலைவரோ அல்லது அமைச்சரோ எமது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கூட நேரம் வழங்கவில்லை.
அதனால் நாங்கள் எமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்படுகின்ற அசெளகரியங்களுக்கு குறித்த அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும்.
எமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்றை விரைவாக வழங்க தவறினால் சில தினங்களில் தொழிற்சங்க போராட்டத்தை நாடுபூராகவும் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறோம்.
இதன் மூலம் நாடுபூராகவும் நீர் விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்போம். அவ்வாறான நிலை ஏற்பட்டால் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களிலும் நீர் விநியோகம் தடைப்படும் அபாயம் இருக்கிறது என்றார்.