இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை பொருள்! சுற்றி வளைத்த பொலிஸார்!!
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட Hash மற்றும் Kush கஞ்சா உள்ளிட்ட பல வகையான போதைப்பொருட்களுடன் Software Engineer ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு என மதிப்பிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மென்பொருள் பொறியியல் பட்டதாரி எனவும், அவர் தொழில் நிமித்தம் அவுஸ்திரேலியாவிற்கு செல்லவிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
ராகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான குறித்த நபர் இன்று (29) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இத்தாலியில் இருந்து போதைப்பொருள் கடத்தும் வலைப்பின்னலின் மூளையாக கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.