ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி குறித்து அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் – காங்கிரஸ் வலியுறத்து!
பா.ஜ.க. பெயரைச் சொல்லி பணம் வசூலிக்கப்பட்டுள்ளதால் ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி குறித்து அண்ணாமலையிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ராகுல் காந்தியின் ஜனநாயக நடவடிக்கைகளை முடக்க மரபுகளுக்கு புறம்பாக மத்திய அரசு மேற்கண்ட சர்வாதிகார அராஜக நடவடிக்கைகள் காரணமாக இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நரேந்திர மோடி மீது வெறுப்பு பார்வை விழுந்துள்ளது.
ஆருத்ரா நிதி நிறுவனத்தில் .2 ஆயிரத்து 600 கோடிக்கு மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊழலில் அரசியல் பின்னணி உள்ளது.
அதானி முறைகேடுகளுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பது போன்று ஆருத்ரா மோசடிக்கு பின்னால் தமிழக பா.ஜ.க உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவராக இருந்துள்ளார்.
இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. ஆதரவு இருக்கிறது என தெரிவித்ததன் அடிப்படையில் முதலீடு செய்தோம் என பலர் தெரிவித்துள்ளனர். அண்ணாமலைக்கும், இந்த நிதி நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது என போலீசார் விசாரிக்க வேண்டும்.
அப்போதுதான் இந்த மோசடி குறித்த உண்மை வெளிவரும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.