அரிசி திருடியதற்காக அடித்து கொலை செய்யப்பட்ட ஆதிவாசி இளைஞர்; குற்றவாளிகளுக்கு சிறை
கேரளாவில் அரிசி திருடியதற்காக வாலிபரை அடித்துக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தின் அட்டபாடி பகுதியில் கடந்த 2018 பிப்ரவரி 22 அன்று இளைஞர் மது (27) என்பவர் கடைகளில் அரிசி திருடியதாக ஒரு கும்பல் அடித்து கொன்றது. இவர் ஆதிவாசி இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.கேரளாவை உலுக்கிய இந்த வழக்கில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், எட்டாம் பிரதி உபைத், நஜீப், ஜைஜுமோன், சதீஷ், சதீஷ், ஹரீஷ், பிஜி, முனீர் ஆகியோரை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து உள்ளது. இதில் அனீஷ்,அப்துல் கரீம் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிக்கபட்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி 14 குற்றவாளிகளுக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மன்னார்க்காடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பதினாறாவது குற்றவாளியான முனீர் தவிர 13 பேருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.அபராதத் தொகையில் பாதியை மதுவின் தாயாருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
அப்பாவி பழங்குடி இளைஞர் மதுவை அடித்து படுகொலை செய்யும் காட்சிகளை கொடூரர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்த கொடூரமும் அதிரவைத்தது. மதுவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், பட்டினியால் மது வாடிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.