அமெரிக்கா செய்ததைத் போன்றுதான் ரஷ்யாவும் செய்கிறது! புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.பெலாரஸ் நாட்டில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிறுவப்போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். இந்த நடவடிக்கை அணுஆயுத பரவல் தடை உறுதிமொழிகளை மீறாது என்று அவர் கூறினார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான பதட்டங்களை அதிகரிக்க அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சியை இது குறிக்கிறது.
தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட பத்து விமானங்களை பெலாரஸில் ரஷ்யா நிறுத்தியுள்ளது என்றார். மேலும், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய பல இஸ்கந்தர் தந்திரோபாய ஏவுகணை அமைப்புகளை ரஷ்யா ஏற்கனவே பெலாரஸுக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா பெலாரஸுக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்காது என்று வலியுறுத்திய புடின், ஜூலை 1ம் திகதி பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு அலகுகளை உருவாக்கும் பணி நிறைவடையும் என்று கூறினார்.அவரது திட்டங்களை ஐரோப்பாவில் அமெரிக்கா அதன் ஆயுதங்களை நிலைநிறுத்துவதுடன் ஒப்பிட்டார். ஐரோப்பிய நட்பு நாடுகளின் பிரதேசத்தில் அமெரிக்கா ஏற்கனவே அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதை அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனுக்கான இராணுவ உதவி தொடர்பாக நேட்டோவுக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
1990களின் நடுப்பகுதியிலிருந்து ரஷ்யா தனது எல்லைகளுக்கு வெளியே இத்தகைய ஆயுதங்களைத் தளமாகக் கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த பரிமாற்றமானது நேட்டோவின் கிழக்கு எல்லையில் அணுவாயுத தாக்குதலுக்கான ரஷ்யாவின் திறனை அதிகரிக்கும்.