அமெரிக்காவின் சமாதான திட்டத்திற்கு அடிப்பணியாத ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)!
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட சமாதானத் திட்டத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) “தயாராக இல்லை” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிர்வாகத்தின் திட்டத்தில் உள்ள வேறுபாடுகளைக் குறைக்க முயற்சிக்கும் நோக்கில் அமெரிக்க மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்கள் இடையே இடம்பெற்ற மூன்று நாள் பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ட்ரம்ப், உக்ரைன் தலைவர் பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி நகர்த்துவதைத் தடுத்து நிறுத்துகிறார்கள் என விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்னும் அந்தத் திட்டத்தைப் படிக்கவில்லை என்பது எனக்கு சற்று ஏமாற்றமாக இருக்கிறது எனக் கூறிய அவர், உக்ரைன் மக்கள் அதை விரும்புவதாகவும், ஆனால் அவர் அதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சமதான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 03 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




