பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கு பயணித்துள்ள யெவெட் கூப்பர்!
பிரித்தானிய வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) ஸ்காண்டிநேவிய (Scandinavia) நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆர்க்டிக் பாதுகாப்பில் பிரித்தானியாவின் கவனத்தை தீவிரப்படுத்தவும், உயர் வடக்கில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக மேம்பட்ட நேட்டோ முயற்சிகளை ஆதரிக்கவும் இந்த சுற்றுப்பயணம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
பின்லாந்து மற்றும் நோர்வேக்கான தனது விஜயத்தின் போது, எல்லைக் காவலர்கள் மற்றும் பிரித்தானிய படையினரை சந்தித்த அவர், பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்துள்ளார்.
மேற்படி பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “பிரித்தானியா ஆர்க்டிக் பாதுகாப்பில் முன்னேறி வருகிறது.
எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ஆர்க்டிக் பாதுகாப்பை வலுப்படுத்தவும், விளாடிமிர் புடின் போன்றவர்கள் எங்கள் நலன்களையும் உள்கட்டமைப்பையும் அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் தடுக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
கீரின்லாந்தை இராணுவ பலத்தை பிரயோகித்தேனும் கைப்பற்ற வேண்டும் என ட்ரம்ப் திட்டமிட்டு வருகின்ற சூழ்நிலையில் யெவெட் கூப்பர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார்.





