பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் – சுயாதீன விசாரணைக்கு அழைப்பு!
மட்டக்களப்பில் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்துறையினரின் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் ராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள சின்ன உப்போடையைச் சேர்ந்த ரினோஷன் என்ற 23 வயதுடைய இளைஞர், டிசம்பர் 2 ஆம் திகதி திருட்டு குற்றச்சாட்டில் மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரது குடும்பத்தினர் கடைசியாக அன்று மாலை அவரை காவல் நிலையத்தில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில் அவர் காவல்துறையினரின் காவலில் இருந்தபோதே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அதிகாரிகள் செயற்கை போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான நோய் காரணமாக மரணம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள சாணக்கியன், மட்டக்களப்பில் இவ்வாறு இடம்பெறுவது முதல் சந்தர்ப்பம் அல்ல எனவும் கூறியுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு அரசு பொறுப்பு. எந்தக் குற்றச்சாட்டும் – குறிப்பாக சைக்கிள் திருட்டு போன்ற சிறிய குற்றச்சாட்டு பொலிஸ் காவலில் இறப்பதை நியாயப்படுத்தாது எனத் தெரிவித்துள்ளார்.





