ஆஸ்திரேலியாவில் AI மீதான காதலால் ஆபத்துக்குள் மூழ்கும் இள வயதினர்
ஆஸ்திரேலியாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலிகள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
YouGov மேற்கொண்ட புதிய ஆய்வின் முடிவுகள் குறித்து பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த ஆய்வின்படி, ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு செயலி மீது காதல் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
18 முதல் 24 வயதுடையவர்களுக்கு இவ்வாறான காதல் உணர்வுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஐந்தில் ஒருவர் AI சாட்போட் மூலம் மனம் விட்டுப் பேசுவது அல்லது உணர்வுகளை வெளிப்படுத்துவதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
AI எனும் செயற்கை நுண்ணறிவு மீதான காதல் மோகம் தற்கொலை உணர்வுகளைத் தூண்டும் வகையில் உணர்ச்சிமிக்கதாக உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்காவில் 14 வயதுச் சிறுவன் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்திருந்தார். இது குறித்து Character.AI உரிமையாளர்கள் மீது சிறுவனின் பெற்றோர் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் AI பயன்பாடு குறித்து பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என குயின்ஸ்லாந்து பள்ளி அதிபர் மைக் கர்டிஸ் எச்சரித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது ஆபத்தான கற்பனை. சிறுவர்கள் தங்கள் AI கூட்டாளர்களுடன் ரகசியமாக ஆரோக்கியமற்ற இணைப்புகளை உருவாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க அவர்களுடன் அதிக நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டும் என மைக் கர்டிஸ் தெரிவித்துள்ளார்.





