ஏமன் இராணுவ அதிகாரி கொலை: மூன்று பெண்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது
கெய்ரோ – யேமன் பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ தொழில்மயமாக்கல் துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் ஹசன் பின் ஜலால் அல்-உபைதியை கெய்ரோவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் ஐந்து சந்தேக நபர்களை எகிப்திய பாதுகாப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.
கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இந்தக் கும்பல் இந்தக் கொலையைச் செய்தது தெளிவாகத் தெரிகிறது.
கொலையைக் கண்டுபிடித்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய எகிப்திய பாதுகாப்புத் துறைகளால் முடிந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் மேஜர் ஜெனரல் ஹசன் அல்-உபைதியுடன் நட்புறவு கொண்டிருந்தவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹசன் அல்-உபைதி தான் இருவரையும் கிசாவில் உள்ள பிளாட்டுக்கு அழைத்தார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் பானத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து அதிகாரியை மயக்கமடையச் செய்து மற்ற குற்றவாளிகளின் உதவியை நாடினார்.
ரமலான் பாலைடி (29), அப்துர்ரஹ்மான் ஷஹாதா (19), இஸ்ரா அதியா (22), சுஹைர் அப்துல் ஹலீம் (17) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முதல் குற்றவாளியின் உறவினரான ஆயா மஹ்மூத் (23) என்பவரும் திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதியை மறைத்து வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது வாக்குமூலம் அளித்த சந்தேகநபர்கள், தங்களில் இருவருக்கு யேமன் இராணுவ அதிகாரியுடன் முன்னர் பழக்கம் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மற்ற குற்றவாளிகளின் உதவியுடன் அந்த அதிகாரியின் குடியிருப்பை கொள்ளையடிக்க இருவரும் உடன்படிக்கைக்கு வந்தனர்.
அந்த குடியிருப்பை அடைந்த குற்றவாளி முதலில் அதிகாரியின் பானத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து மற்ற குற்றவாளிகளுக்கு பிளாட்டின் கதவைத் திறந்தார்.
கொள்ளை முயற்சியை எதிர்த்த அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டி, அடித்து, கை, கால்களை கட்டி தரையில் தள்ளினார். அதிகாரி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
அந்த குடியிருப்பில் இருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள், மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்களை திருடிய கும்பல், ஏமன் அதிகாரி ஒருவர் வாடகைக்கு அமர்த்திய காரில் அங்கிருந்து தப்பிச் சென்றது.
முதல் குற்றவாளியான ரமலான் பாலைடி மீது கொலை, உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேஜர் ஜெனரல் ஹசன் பின் ஜலால் அல்-உபைதி, முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவின் காலத்தில் யேமன் இராணுவத்திற்காக ஜலால் 1, ஜலால் 2 மற்றும் ஜலால் 3 எனப்படும் கவச வாகனங்களை முதன்முதலில் தயாரிக்கத் தொடங்கினார்.
அவர் அலி அப்துல்லா ஸ்வாலியின் மகன் அஹ்மத் அலி ஸ்வாலியுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.