ஹொங்கொங்கில் அமெரிக்கா பயன்படுத்திய 02 ஆம் உலகப்போர்கால குண்டு கண்டுப்பிடிப்பு!
இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்கா பயன்படுத்திய வெடிகுண்டு ஒன்று ஹொங்கொங்கின் கட்டுமான தளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்காக அப்பகுதியை சுற்றியிருந்த 1,900 வீடுகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குண்டானது 1.5 மீட்டர் (கிட்டத்தட்ட 5 அடி) நீளமும் சுமார் 1,000 பவுண்டுகள் (450 கிலோகிராம்) எடையும் கொண்டது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகுதியில் தொடங்கி இன்று (சனிக்கிழமை) காலை 11:30 மணி வரை நீடித்தது. இந்த நடவடிக்கையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போரில் எஞ்சிய குண்டுகள் ஹொங்கொங்கில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது.
போரின் போது ஜப்பானியப் படைகளால் இந்த நகரம் ஆக்கிரமிக்கப்பட்டது. அப்போது ஜப்பானிய இராணுவம் கப்பல் போக்குவரத்துக்கான தளமாக பயன்படுத்தி வந்தது.
ஜப்பானிய விநியோக வழித்தடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை சீர்குலைக்க அமெரிக்கா, மற்ற நேச நாட்டுப் படைகளுடன் சேர்ந்து, வான்வழித் தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.





