அரசியல் கருத்து & பகுப்பாய்வு

போரின் முடிவா அல்லது சமரசத்தின் தொடக்கமா? செலென்ஸ்கி–ட்ரம்ப் சந்திப்பை நோக்கி உலக பார்வை

மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன்–ரஷ்ய போர், உலக அரசியல் சமநிலையையே மாற்றியமைத்துள்ள நிலையில், அந்தப் போருக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் புளோரிடாவில் சந்திக்க உள்ளனர்.

ரஷ்யாவின் தீவிர வான்வழித் தாக்குதல்களும், நிலப்பரப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகளும் சூழ்ந்த இந்தச் சந்திப்பு, உக்ரைன் போரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.

உக்ரைனில் நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டத்தை வகுப்பதற்காக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் சந்திக்க உள்ளனர்.

கியேவ் (Kyiv)மற்றும் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் பல பகுதிகளை நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் சனிக்கிழமை, ரஷ்யா தாக்கியது.

இதனால் தலைநகரின் சில பகுதிகளில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யும் அமைதி முயற்சிகளுக்கு எதிரான ரஷ்யாவின் பதிலாகவே இந்தத் தாக்குதல்களை செலென்ஸ்கி விபரித்தார்.

ட்ரம்பின் புளோரிடா இல்லத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தின் எதிர்காலம், சபோரிஜியா அணுமின் நிலையத்தின் நிலை மற்றும் பிந்தைய பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

டான்பாஸ் முழுவதையும் உக்ரைன் கைவிட வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, அமெரிக்கா முன்வைத்துள்ள 20 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டம் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செலென்ஸ்கி தெரிவித்தார். ஆனால், எந்தப் பகுதி ரஷ்யாவிற்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த விவகாரம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அமெரிக்க முன்மொழிவில் உக்ரைனின் தேசிய நலன்களுக்கு முரணானதாக கருதப்படும் சில அம்சங்களை தளர்த்துவதற்கு கெய்வ் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் செலென்ஸ்கி கூறினார்.

அது தோல்வியடைந்தால் முழுத் திட்டத்தையும் உக்ரைன் மக்களிடையே வாக்கெடுப்புக்கு விடத் தயாராக இருப்பதாகவும் செலென்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அத்தகைய வாக்கெடுப்பு நடத்த, ரஷ்யா குறைந்தது 60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் உக்ரைனுக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றன. கனடா பிரதமர் மார்க் கார்னி, ரஷ்யாவின் அண்மைய தாக்குதல்கள் அமைதிக்கான விருப்பம் இல்லையென்பதை வெளிப்படுத்துவதாகக் கூறி, உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவியை அறிவித்தார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் “நியாயமான மற்றும் நீடித்த அமைதி” என்பதே ஐரோப்பாவின் இலக்கு என்றும் தெரிவித்திருக்கிறார்.

டான்பாஸ் உள்ளிட்ட பிரதேச விவகாரங்களில் அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் ஆழமான முரண்பாடுகள், இந்தச் சந்திப்பின் வெற்றியைப் பற்றிய சந்தேகங்களை எழுப்புகின்றன. ஒருபுறம், போரை முடிவுக்குக் கொண்டுவரும் அரசியல் சமரசம் குறித்து பேசப்பட்டாலும், மறுபுறம் ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்கள் அமைதிக்கான வாய்ப்புகளை மேலும் சிக்கலாக்குகின்றன.

இந்நிலையில், புளோரிடாவில் நடைபெறவுள்ள செலென்ஸ்கி–ட்ரம்ப் சந்திப்பு, உக்ரைனுக்கு அரசியல் நம்பிக்கையா அல்லது புதிய அழுத்தங்களா என்பதை தீர்மானிக்கும் முக்கிய அரசியல் தருணமாக மாறக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!