இலங்கைக்கு $175,000 அவசர நிதியை வழங்கிய உலக சுகாதார அமைப்பு
டித்வா(Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட நிலைமைகள் வேகமாக மோசமடைந்து வருவதால், இலங்கையில் அத்தியாவசிய சுகாதார சேவைகளை ஆதரிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு(WHO) 175,000 அமெரிக்க டாலர் அவசர நிதியை வழங்கியுள்ளது.
“பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை ஆதரிப்பதற்கான விரைவான மீட்பு குழுக்களுக்கும், நோய்களை சரியான நேரத்தில் கண்டறிவதற்கும், பொருத்தமான மீட்புக்கு உதவுவதற்கும் முக்கியமான சுகாதார தகவல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்” என்று இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பு பிரதிநிதி மருத்துவர் ராஜேஷ் பாண்டவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டதிலிருந்து உலக சுகாதார அமைப்பு குழுக்கள் அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன.
மேலும், “தேசிய மீட்பு நடவடிக்கையை ஆதரிப்பதற்கும், பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கும் WHO முழுமையாக உறுதிபூண்டுள்ளது” என்று மருத்துவர் ராஜேஷ் பாண்டவ் குறிப்பிட்டுள்ளார்.




