இந்தியாவில் நிலத்துக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள்; மீட்கப்பட்ட சடலம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளம் நிரம்பிய நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து புதன்கிழமை (ஜனவரி 8) சுரங்க ஊழியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நிலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஒன்பது ஆண்களைத் தேடும் பணி இரண்டு நாள்களுக்கு முன்னர் தொடங்கியது. 91.4 மீட்டர் ஆழமான அந்தச் சுரங்கத்தில் பல நிலத்தடிச் சுரங்கங்கள் உள்ளன. கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 6) காலை சுரங்க ஊழியர்கள் தண்ணீர்க் குழாய் ஒன்றை இடித்ததால் சுரங்கத்தில் வெள்ளம் சூழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் மீட்புப் முயற்சிகளில் உதவ, முக்குளிப்பாளர்கள், பொறியாளர்களோடு ஹெலிகாப்டர்களையும் ராணுவம் பணியில் அமர்த்தியது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) மீட்புப் பணிகளுக்கு வெள்ளம் இடையூறாக இருந்தது. இருப்பினும், நிபுணத்துவ முக்குளிப்பாளர்கள் புதன்கிழமை (ஜனவரி 8) மீண்டும் சுரங்கத்திற்குள் சென்று சடலம் ஒன்றை மீட்டெடுத்ததாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்தார்.
“இறந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் எஞ்சிய 8 பேரை மீட்கும் பணியில், கடற்படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஆகியவை தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் 8 பேரும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு,” என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
“நாங்கள் சடலத்தைப் பார்க்கவில்லை. உள்ளே முற்றிலும் இருண்டு காணப்பட்டது. கைகளைப் பயன்படுத்தியபோது, சடலம் ஒன்றைத் தொட்டோம்,” என்று முக்குளிப்பாளர்களில் ஒருவர் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
முன்னதாக, “இந்தச் சுரங்கம் சட்டவிரோதமானது போல் தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது,” என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.