காசிகோட் யானை சுரங்கப்பாதை பணிகள் ஜனவரி 19 இல் மீண்டும் தொடக்கம்
காசிகோட் யானை சுரங்கப்பாதை திட்டத்தின் பணிகள், கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து செய்யப்பட்ட விரிவான ஆய்வுக்குப் பின்னர், ஜனவரி 19 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
ரயில்வே துறை சமர்ப்பித்த கூட்டு ஆய்வு அறிக்கையில், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு இன்றி முன்பு கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதையில் சில முக்கிய குறைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், மனித-யானை மோதல்களை குறைக்கும் நல்ல நோக்குடன் உருவாக்கப்பட்ட முக்கிய திட்டமாக இது கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதுள்ள குறைகளை சரிசெய்து, யானைகளின் வாழ்விடங்களையும் மனித உயிர்களையும் பாதுகாக்கும் வகையில் திட்டத்தை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிகா படபேந்தி, துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகள் சுரங்கப்பாதையில் எளிதாக செல்ல வசதியாக சாய்வு பாதை அமைக்கப்பட உள்ளது.
வாகன வேகத்தைக் குறைக்க வீதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், யானை விபத்துகளைத் தவிர்க்க ரயில் சாரதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
யானை விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் ரயில் பாதைகளில் 147 எச்சரிக்கை பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





