மகளிர் உலகக்கோப்பை – பாகிஸ்தான், நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 19வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று நியூசிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இடைவிடாது மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
புள்ளி பட்டியலின் அடிப்படையில், நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்து ஐந்தாம் இடத்திலும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி எவ்வித வெற்றிகளும் இன்றி இறுதி இடத்திலும் உள்ளது.
அந்த வகையில், இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதால் தென் ஆப்பிரிக்கா அணி 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும், கடந்த சில வாரங்களாக இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 4 போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் சில அணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.