ஜெர்மனியில் பெண்களுக்கு மர்ம நபர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பொலிஸார் எச்சரிக்கை
ஜெர்மனியில் வாகனங்களில் பயணிக்கும் பெண்களுக்கு மர்ம நபர்களால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்கு வரும் மர்ம நபர்களால் பெண்களின் உடமைகளை கொள்ளையிடுவதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக சுப்பர் மார்க்கெட் வாசல்களுக்கு வாகனங்களில் வரும் பெண்களே இந்த கும்பலால் குறி வைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
வாகனங்களில் பெண்கள் இருந்தால் பின் பகுதியில் உள்ள ஜன்னல்களை யாரோ ஒருவர் வந்து தட்டி வெளியே வந்து பார்க்குமாறு கோருகின்றனர்.
வாகனத்தின் பின்னால் டயருக்கு கீழ் சில நாணயங்கள் கிடப்பதாகவும் அது தங்களுடையதாக இருக்கலாம் எனவும் மர்ம நபரால் தெரிவிக்கப்படுகிறது.
அதனை நம்பி கீழே எடுக்க செல்லும் நொடிப்பொழுதில் காரின் முன் பகுதியில் உள்ள பைகள் திருடி செல்லப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது ஒரு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட செயல் என பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை லிம்பர்க்கில் ஒரு பெண்ணின் கைப்பையை மோசடி செய்பவர்கள் இந்த தந்திரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளனர்.
46 வயதான பெண் சூப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் தனது காரில் அமர்ந்திருந்தபோது, ஒரு அடையாளம் தெரியாத நபர் ஜன்னலைத் தட்டி பின்புறத்தைக் காட்டினார்.
பின்னர் அந்தப் பெண் பின்புற டயருக்கு அருகில் பல பணம் கிடப்பதைக் கண்டதும், அவர் வெளியே வந்து நாணயங்களை எடுத்துள்ளார்.
இதற்கிடையில், வேறு மற்றுமொரு நபர் பயணிகள் இருக்கையில் இருந்து கைப்பையை திருடி சென்றுள்ளார்.
இதனால் மர்ம நபர்கள் வாகனத்தை தட்டினால் ஜன்னலை அல்லது காரின் கதவை திறக்க வேண்டாம் என பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.