கொரியாவில் ஆண்களின் தற்கொலைக்கு பெண்களே காரணம் – எம்.பியின் சர்ச்சை கருத்து
தென் கொரியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரிப்பதற்குக் காரணம், சமூகத்தில் பெண்கள் அதிக சக்தி வாய்ந்த பங்களிப்பை மேற்கொள்வதே காரணம் என தென் கொரிய அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த ஆதாரமற்ற கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவின் ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கிம் கி-டுக், பல ஆண்டுகளாக, தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதால், ஆண்களுக்கு வேலை தேடுவதும், அவர்களைத் திருமணம் செய்யத் தயாராக இருக்கும் பெண்களைக் கண்டறிவதும் கடினமாகிறது என்று கூறியுள்ளார்.
தென் கொரியா தற்போது பெண் ஆதிக்க சமூகமாக மாறத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் ஆண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
உலகின் பணக்கார நாடுகளில் தென் கொரியா அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்டிருந்தாலும், பாலின சமத்துவத்தின் அடிப்படையில் அது மிகவும் பின்தங்கியுள்ளது.
தென் கொரியாவின் சியோலில் உள்ள கேங் ஆற்றங்கரையில் உள்ள பாலங்களில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களின் தரவுகளின் அடிப்படையில் கிம் கி-டுக் இந்த மதிப்பீட்டிற்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அறிக்கையின்படி, பாலங்களில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கை 2018 இல் 430 ஆக பதிவாகியிருந்தது, அது 2023 இல் 1,035 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அவர்களில் ஆண்களின் விகிதம் 67% இல் இருந்து 77% ஆக அதிகரித்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், அரசியல்வாதியின் அறிக்கை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கொரிய மனநல நிபுணர் ஒருவர், போதிய ஆதாரங்கள் இன்றி இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவது ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்கொலைக்கு முயற்சிக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் எம்.பி இதனை பாலின மோதலாக மாற்றியிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.