ஈஸிஜெட் விமானத்தில் இறந்த நிலையில் பயணித்த பெண் – 12 மணிநேரம் காத்திருந்த பயணிகள்!
ஈஸிஜெட் விமானத்தில் குடும்பம் ஒன்று இறந்த பயணி ஒருவரை அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து உறவினர்கள் 89 வயதான இறந்த பயணியை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, ஊழியர்கள் அந்தப் பெண்ணின் நிலையைப் பற்றி பலமுறை கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் உறவினர்கள் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக பொய்யுரைத்துள்ளனர்.
விமானம் ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியபோதுதான், கேபின் குழுவினர் அந்தப் பெண் இறந்துவிட்டதை அறிந்துள்ளனர்.
இந்நிலையில் கேட்விக் செல்லும் விமானம் புறப்படுவதற்கு முன்பு திருப்பி விடப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் காரணமாக விமானம் சுமார் 12 மணிநேரம் தாமதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பெண் செல்லுபடியாகும் பறக்கும் தகுதிச் சான்றிதழை வைத்திருந்ததாகவும், விமானத்தில் ஏறும் போது உயிருடன் இருந்ததாகவும் விமான நிறுவனம் கூறுகிறது.
வாடிக்கையாளருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட பிறகு விமானம் மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்பியதாகவும், அவசர சேவைகள் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“வாடிக்கையாளர் துரதிர்ஷ்டவசமாக காலமானார்,” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




