WIPL – முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது.
அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
எந்த வீராங்கனையும் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை. 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 23 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி திணறியது.
அந்த அணியின் தயாளன் ஹேமலதா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய மோனிகா படேலும் இரட்டை இலக்கை எட்டினார். இறுதியில், குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.
ஹேமலதா 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் சார்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டும், நட் சிவர் பிரண்ட், அமீலியா கெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முத்திரை பதித்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது