2 நாளாக தொடர்கிறது விமலின் போராட்டம்: அரசியல் நாடகமென கடும் விமர்சனம்!
கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சவால் Wimal Weerawansa முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியை பிரதமர் துறக்க வேண்டும் ஆகிய இரு விடயங்களை வலியுறுத்தி கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று (12) ஆரம்பித்தார்.
பிரதமர்மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவராக செயல்படுகின்றார் என குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.
ஐ.நாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அரசியல் நகைச்சுவையாளராக மாறிய விமலின் இந்த போராட்டமும் அரசியல் நாடகமென சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டுவருகின்றது.
நேற்றிரவு 11 மணியளவில் போராட்டக்களத்தில் இருந்து விமல் வீரவன்ச வெளியேறினார். இந்நிலையில் இன்று காலை மீண்டும் வந்து இணைந்துள்ளார். தமது இலக்கை அடையும்வரை போராட்டம் தொடரும் என அவர் சூளுரைத்துள்ளார்.
பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் விமல்வீரவன்ச, அவர் களமிறங்கும் அணியில் முதல் இரு இடங்களுக்குள் விருப்பு வாக்குகளைப் பெறுவார். ஆனால் அரசியல் மாற்றத்தையடுத்து அவர் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.
தற்போது பிரதான கட்சிகளுடன் அவர் தரப்பு கூட்டணி உறவையும் பேணவில்லை. அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்த நிலையில், பாலஸ்தீனம் தொடர்பில் பாடலொன்றை எழுதி இருந்தார் விமல் வீரவன்ச.
பிறகு அவ்வப்போது ஊடகங்கள் முன் தலைகாட்டுவார். தையிட்டி பிரச்சினையை அடுத்து களத்துக்கு வந்த அவர், தற்போது பிரதமருக்கு எதிரான போராட்டத்தை முழு வீச்சுடன் கையில் எடுத்துள்ளமை அரசியல் இருப்புக்கான போராட்டம் என ஊடகவியலாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.





