சர்வதேச அரங்கில் 9000 ரன்கள் – சாதனைகளை முறியடித்த வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் கேன் வில்லியம்சன். அவர் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார். இந்நிலையில், கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் முதல் இன்னிங்சில் 93 ரன்களும், 2-வது இன்னிங்சில் 61 ரன்களும் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 9000 ரன்களை கடந்து அசத்தினார். இதன் மூலம், சர்வதேச டெஸ்ட் போட்டியில் மிக வேகமாக 9000 ரன்களை குவித்த முதல் நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். மேலும், இந்த சாதனைப் படைத்த சம கால வீரர்களில் அவர் இரண்டாவது வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.
இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்தத் தலைமுறையின் ‘ஃபேப் ஃபோர்’ வீரர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் 9000 ரன்களை கடந்த நிலையில், அதிவேகமாக கடந்தவர்கள் பட்டியலில் ஸ்மித் தான் முதல் இடத்தில் உள்ளார். ரூட் மூன்றாவது இடத்திலும், சமீபகாலமாக டெஸ்ட் போட்டியில் மந்தமாக ஆடி வரும் கோலி கடைசி இடத்திலும் உள்ளார்.
கூடுதலாக, வில்லியம்சன் ஃபேப் ஃபோர் 54.89 இல் இரண்டாவது சிறந்த சராசரியைப் பெற்றுள்ளார். ஸ்மித் அதிகபட்சமாக 57.32 சராசரியும், ரூட் 50.62 சராசரியும், கோலி 49.15 சராசரியும் பெற்றுள்ளனர்.
ஒப்பந்தம் இல்லை
முன்னதாக, டி20 உலகக் கோப்பையில் இருந்து அணி முன்கூட்டியே வெளியேறிய பிறகு வில்லியம்சன் ஒயிட்-பால் கேப்டன் பதவியில் இருந்து விலகினார், மேலும் 2024-25 சீசனுக்கான தேசிய அணிக்கான
ஒப்பந்தத்தையும் நிராகரித்தார். இருப்பினும், அணி நிர்வாகம் அழைக்கும் பட்சத்தில் அணியுடன் இணைய எப்போதும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.