Site icon Tamil News

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை கிடைக்குமா? : முக்கிய கலந்துரையாடல் இன்று!

பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணிகளை வழங்குவது தொடர்பில் இன்று (25.10) இடம்பெறும் துணை அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டால், அடுத்த வாரத்தில் இதற்கான அனுமதி கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகமையத்தில் நேற்று (24.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போது 10 மாவட்டங்களில் தோட்டப்பகுதிகளில் சுமார் இரண்டு இலட்சத்து 31 000 குடும்பங்கள் காணப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் வீடு மற்றும் காணி பிரச்சினை காணப்படுகிறது. இவர்களில் சுமார் 66 000 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக அல்லது அமைச்சின் ஊடாக வீடுகள் கிடைத்துள்ளன.

அல்லது அவர்கள் தாமாகவே வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர். எஞ்சியுள்ள ஒரு இலட்சத்து 76 000 குடும்பங்களுக்கு காணி உரிமம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 பேர்ச் காணியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி 30ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்கு அனைவரும் ஒத்துழைத்தால் இம்முயற்சி நிச்சயம் நிறைவேறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version