பாகிஸ்தானுக்கு செல்லுமா இந்திய அணி? Champions Trophy திகதி அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்த உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது இருந்தே துவங்கி உள்ளது. அதன்படி, 2025 பிப்ரவரி 19 அன்று போட்டி துவங்கும் என்றும், இறுதிப் போட்டி மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், மொத்தம் 20 நாட்கள் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2017 பைனலில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளதால் இந்திய அணி அங்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான பகை இன்னும் தீராத நிலையில் பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவது சந்தேகமே.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளும் முதலில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததை தொடர்ந்து இலங்கையில் போட்டிகள் நடைபெற்றது. எனவே, பிசிசிஐ இந்திய அணியை அனுப்பாத பட்சத்தில் துபாயில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் நடத்தப்படலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) லாகூரில் உள்ள மைதானத்தில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்திய அணி கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றது.
அதன்பிறகு ஒருமுறை கூட அங்கு விளையாட செல்லவில்லை. சாம்பியன்ஸ் ட்ராபிக்கு 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் எட்டு இடம் பிடித்த அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.
இதுவரை நடைபெற்றுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக உள்ளது. மேலும், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ள.
பாகிஸ்தான் அணி வரலாற்றில் முதல் முறையாக இந்த போட்டியை நடத்தவுள்ளது. முன்னதாக 2008ல் நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டன. 2023 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்த நிலையில், தற்போது சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட இந்தியா பாகிஸ்தான் செல்லுமா என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.