தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை!

லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணியுடன் திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் நிலையில், தொடா் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை சூப்பா் கிங்ஸ் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு தொடா்ந்து 5 ஆட்டங்களில் தோற்றுள்ளது சென்னை. இது அந்த அணிக்கு மிகவும் நெருக்கடியான காலகட்டமாக அமைந்துள்ளது. இதில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடா்ந்து 3 ஆட்டங்களில் தோற்றுள்ளது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்து காயத்தால் அகற்றப்பட்ட நிலையில், மூத்த வீரா் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றாா். ஆனால் அவரது முதல் ஆட்டமே சோதனையாக அமைந்து விட்டது.
இந்நிலையில் லக்னௌவில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் சென்னை அணி மீண்டும் சிறப்பாக ஆடி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
அணியில் பவா் ஹிட்டா்கள் இல்லாதது பாதகமாக உள்ளது. பவா் பிளேயில் 60 ரன்கள் இலக்கு என்பது சவாலானதாக உள்ளது என தோனியே ஒப்புக் கொண்டுள்ளாா். தொடக்க பேட்டா்கள் ரச்சின் ரவீந்திரா-டேவன் கான்வே அதிரடியாக ஆடினாலும், அவா்களது ஸ்டைல் வேறுபடுகிறது. மூன்றாம் டௌனில் களமிறக்கப்படும் ராகுல் திரிபாதிக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.
ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சரிவர சோபிக்காதது அணிக்கு பலவீனமாக உள்ளது. மிடில் ஆா்டரில் ஷிவம் டுபே மட்டுமே ஒரளவுக்கு ஆடுகிறாா். அவருக்கு இதர வீரா்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தோனியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படுவதும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
பௌலிங்கில் சென்னை அணியினா் சோபிக்காதது கவலை தருவதாகும். அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு ஏமாற்றத்தை தருகிறது. நூா் அகமது, கலீல் அகமது மட்டுமே நம்பிக்கை தருகின்றனா்.
சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது லக்னௌ . குறிப்பாக இந்த வெற்றி பௌலா்களால் தான் சாத்தியமானது. அவேஷ் கான், ரவி பிஷ்னோய், சா்துல் தாகுா் ஆகியோா் அற்புதமாக பௌலிங் செய்வது வலிமையை தருகிறது.
பேட்டிங்கில் எய்டன் மாா்க்ரம், நிக்கோலஸ் பூரன் ஆகியோா் அபார பாா்மில் உள்ளனா். மிட்செல் மாா்ஷ் இல்லாத நிலையில் கேப்டன் ரிஷப் பந்த் இரண்டாவது டௌனில் ஆடி வருகிறாா். மிட்செல் மாா்ஷ் அணியில் இணைவது பலத்தை தரும். தொடா்ந்து 4-ஆவது வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் லக்னௌ களமிறங்குகிறது.