AI தொழில்நுட்பம் மனிதனை மிஞ்சுமா..? விஞ்ஞானிகள் தரும் தகவல்கள்
மனித குலத்தை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் காரணிகள் குறித்து பல நூறு ஆண்டுகளாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான காரணிகளை கண்டறிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தேடலின் பயனாக உயிரியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம் என்பன போன்ற பல்வேறு கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வரிசையில் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கு அடுத்தபடியாக ஆறாவது பூதம் என்று சொல்லப்படும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு அசுர வளர்ச்சியடைந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. மனிதர்கள் செய்யும் பல பணிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் இயந்திரங்கள் கண் இமைக்காமல் செய்யத் தொடங்கியுள்ளன. மனிதர்களின் படைப்பாற்றலே ரோபோக்கள் மற்றும் இயந்திரங்களின் உருவாக்கத்திற்கு அடிப்படை காரணியாக அமைந்துள்ளது. ஆனால், தற்போது மனித குலத்துக்கே சவால்விடும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ-ஐ) தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.
இனி சகலமும் செயற்கை நுண்ணறிவு என்று ஆகிப்போனால் மனிதனின் நிலை என்னவாகும்? என்ற சிந்தனை உலகம் முழுவதும் ஒலிக்கிறது. அதேநேரத்தில் மனிதன் செய்யும் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவால் செய்ய இயலுமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தன்னுடைய தனிப்பட்ட குணாதிசயங்களில் சிலவற்றை மனிதனால் ஏ-ஐ.,க்கு மாற்ற முடியும். ஆனால் செயற்கை நுண்ணறிவால் அவற்றைச் சொந்தமாக உருவாக்க முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள். மனிதனின் தன்னிச்சையான செயல்பாடுதான், செயற்கை நுண்ணறிவில் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று. தன்னிச்சையான செயல்பாடு, அறிவு மற்றும் செயல் திறனால் அனைத்தையும் படைக்கும் அல்லது உருவாக்கும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது.
ஒருநாள் காலையில் விழித்தெழும் ஒரு மனிதர், ஒரு கவிதை அல்லது கதையைப் படைப்பது குறித்துச் சிந்திக்கலாம். ஆகச் சிறந்த படைப்பை உருவாக்குவது குறித்து கற்பனை செய்யலாம். வாழ்வின் தனது தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து அவர் புதிய கற்பிதங்களை, அனுபவங்களை இந்த உலகுக்கு அளிக்கலாம். ஆனால் மனிதர்களின் இதுபோன்ற தன்னிச்சையான செயல்பாடுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேற்கொள்ள இயலாது. ஆனால் நிலைக்கேற்ப செயல்படும் நுட்பத்தை உருவாக்கும் நிலையை செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் எட்டலாம். அப்போது அதன் செயல்பாடு மனிதர்களின் தன்னிச்சையான செயல்களை ஒத்திருக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு பல விஷயங்களில் மனிதர்களைவிட சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும், மனிதனின் தனித்துவமான அம்சங்களை அதனால் நகலெடுக்க இயலாது. ஆனால், அது விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் ஒரு செயலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். அதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும் மனிதர்களால் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டதாகவே இருக்கிறது என்கின்றனர் மெக்சிகோவின் ஜராகோசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான மிகுவல் அகுலேரா மற்றும் மானுவல் பேடியா. உலக அளவில் புகழ்பெற்ற ஜாஸ் இசையை அளிக்கும் குழுவை மேம்படுத்தப்பட வேண்டுமென்றால், அதை மனிதரால்தான் செய்ய இயலுமே தவிர, செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் மேற்கொள்ள முடியாது என்பது இதற்கொரு உதாரணம்.
பிளேட் ரன்னர் திரைப்படத்தில் உணர்வுகள் இல்லாத இயந்திரங்கள் மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. நெறிமுறைகள், கோட்பாடுகள் ஒரு மனிதன் சமூகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும், அவனது எதேச்சையான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு சட்ட விதிமுறைகள், நெறிமுறைகள், மதக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அதோடு தான் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்ற தெளிவும் மனிதர்களுக்கு உள்ளது. ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கோ, இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்படும் இயந்திரங்களுக்கோ மனிதனைப் போன்று எந்த நெறிமுறைகளும், கோட்பாடுகளும் இல்லை. தங்களுக்குள் முன்பே புகுத்தப்பட்ட செயல்பாட்டு விதிமுறைகள், நிரல்கள் அல்லது கட்டளைகளின்படி மட்டுமே அவற்றால் செயல்பட முடியும். எனவே மனிதர்களால் கடைபிடிக்கப்படும் பல்வேறு நெறிமுறைகளை, செயற்கை நுண்ணறிவால் பின்பற்ற முடியாது என்பது தெளிவாகிறது.
இதுகுறித்து அறிவியல் மேம்பாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: உலகளவில் இன்று பிரபலமாக உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் செயலியான ‘சாட்-ஜிபிடி’ உணர்திறன் மிக்க உள்ளடக்கங்களை ஒளிபரப்பு செய்யாதபடியும், ஆழமான அணுகலுக்கு அனுமதி அளிக்காதபடியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. முறையான நெறிமுறைகளைப் பின்பற்றும் மனிதர்களால்தான் இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் காலப்போக்கில் மாறலாம். அப்போதும் இதற்கான நெறிமுறைகளின் அடிப்படையானது மனிதனுடன் தொடர்புடையதாகவே இருக்குமேயன்றி, தன்னிச்சையாக ஒருபோதும் அமையாது.
உணர்வுகள் மட்டுமின்றி, எண்ணம் மற்றும் மனிதனின் தன்னிச்சையான செயல்பாடுகளை செயற்கை நுண்ணறிவால் நகலெடுக்க இயலாது. எண்ணம் மற்றும் செயல் செயற்கை நுண்ணறிவில் இருந்து மனிதர்களை தனித்துவப்படுத்திக் காட்டும் மற்றொரு காரணி அவர்களது எண்ணங்கள். மனிதர்களின் எண்ணங்களை வெறும் ஆசைகள் அல்லது உள் உளவியல் நிலைகளாகக் குறைத்து மதிப்பிட முடியாது. எண்ணம் என்பது ஒரு செயலின் இன்றியமையாத பண்பு. அது தார்மீகப் பொறுப்புடன் உள்ளார்ந்த தொடர்புடையது. எனவே ஒரு செயல் தார்மீக ரீதியாக சரியா, தவறா என்பதைத் தீர்மானிக்கும்போது, அதிலிருந்து நோக்கத்தைப் பிரிக்க முடியாது.
செயற்கை நுண்ணறிவுக்கு வருத்தங்களோ, உளவியல் பிரச்னைகளோ இல்லை. மனிதனுக்கும், செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான வேறுபாடுகள் தெளிவாக உள்ளன. ஏ-ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு எந்த அனுபவமும், வரலாறும் கிடையாது. அதேபோல் உளவியல் ரீதியான எந்தப் பிரச்னையும் அவற்றுக்கு இல்லை. அத்துடன் மனித நெறிமுறைகள், அறநெறிகளின் அடிப்படை அம்சமாய், எதிர்மறையான ஒரு செயலுக்காக செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் வருந்துவதும் இல்லை. அவை நேசிக்கவோ, நேசிக்கப்படுவதோ இல்லை. அவை துன்பங்களையோ, வலிகளையோ உணர்வதில்லை. ஆனால் மனிதனுக்கு என்று ஏராளமான தனித்துவங்கள் உள்ளன. எனவே ஏ-ஐ.,தொழில் நுட்பம் மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதைவிட மிகப்பெரிய அரும்பெரும் தொழில் நுட்பங்கள் வந்தாலும் மனிதர்களுக்கு எப்ேபாதும் இணையாகாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* ஆக்கமும் அழித்தலும் நம் கையில்தான் உள்ளது
‘‘நெறிமுறைகள் மற்றும் நீதி முறைமைகள் எதுவும் இல்லாததால் செயற்கை நுண்ணறிவுக்கு என்று தனிப்பட்ட எண்ணம் இல்லை. இந்த எண்ணம் அதன் செயற்பாட்டைத் தீர்மானிக்கும் புரோகிராமுடன் தொடர்புடையதாக உள்ளது. சுருங்கக் கூறினால் அவற்றுக்கென சொந்த கருத்து என்று எதுவும் இல்லை. ஏனெனில் எதுவுமே அவற்றுக்குச் சொந்தமானது இல்லை. மனிதனுக்கு பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே இது நிலைத்திருக்கும். இல்லையெனில் அது காலாவதியாகி விடக்கூடும். ஏனெனில் அதற்கென தனி அடையாளம் எதுவும் இல்லை. ஆனால் மனிதனுக்கு அப்படி இல்லை. அவனுக்கென்று தனித்த அடையாளங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமானதாகவோ, அழிவுகரமானதாகவோ பயன்படுத்துவது மனிதர்களின் கையில்தான் உள்ளது,’’ என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
* நெறிமுறைகள் வகுக்க வாய்ப்பு
ஆரம்ப நிலையில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நல்ல முறையில் வளர்த்தெடுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக மனிதன் தனக்கு வகுக்கப்பட்டுள்ள நன்னெறிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. நன்மை, தீமைகளை வேறுபடுத்தி அறியும் பகுத்தறிவாக நெறிமுறைகள் விளங்குகின்றன. வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றும் மனிதர்களால், இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான நிரல்கள் வகுக்கப்படும்போது ஓர் இயந்திரம் நல்லது, கெட்டது என்றில்லாமல் பயனுள்ளதாக அமைகிறது. ஆனாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளும் வரும் காலத்தில் வகுக்கப்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் இயற்பியலாளர்கள்.
* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நெறிமுறைகள் காலப்போக்கில் மாறலாம். அப்போதும் இதற்கான நெறிமுறைகளின் அடிப்படையானது மனிதனுடன் தொடர்புடையதாகவே இருக்குமேயன்றி, தன்னிச்சையாக ஒருபோதும் அமையாது.
* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் செயலியான ‘சாட்-ஜிபிடி’ முறையான நெறிமுறைகளைப் பின்பற்றும் மனிதர்களால்தான் இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது