அமெரிக்காவை அச்சுறுத்தும் காட்டுத்தீ – கட்டுப்படுத்த முடியாமல் திணறல் – தப்பியோடும் மக்கள்
அமெரிக்காவில் வேகமாக பரவிய காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் கருகி சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில், நீர் மேலாண்மையில் நடந்த குளறுபடி குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை ஒட்டியுள்ள ஆண்டிலோப் பள்ளத்தாக்கிற்கும் சாண்டா கிளாரிட்டாவுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் கடந்த 7ஆம் திகதி பற்றி எரிய ஆரம்பித்த காட்டுத்தீ, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகர் வரை சுமார் 35 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு மளமளவென பரவியது.
காட்டுத்தீ காரணமாக ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் முக்கிய உடமைகளுடன் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதுவரை வரலாற்றிலேயே இல்லாதளவுக்கு, லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் சுமார் 15 ஆயிரம் கட்டடங்கள் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன. இதன் சேத மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் அளவு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அணுகுண்டு போட்டால் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ அந்தளவுக்கு காட்டுத்தீயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீக்கு இதுவரைக்கும் 11 பேர் இரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காட்டுத்தீ ஏப்படி பற்றியது என்பதற்கான மூலக் காரணம் குறித்து அறியப்படவில்லை என்றும், வறண்ட வானிலை காரணமாகவும், காற்று வேகமாக வீசியதுமே தீ மளமளவென பரவக்காரணம் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தின் கடற்கரை பகுதிகளையும் காட்டுத்தீ விட்டுவைக்கவில்லை. லாஸ் ஏஞ்சலீஸ் கடற்கரையை ஒட்டியுள்ள மலிபு என்ற பகுதியில் வசித்துவந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு இடம்பெயந்தனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் தான் வென்ற 10 பதக்கங்களையும் காட்டுத்தீக்கு பறி கொடுத்ததாக அமெரிக்க முன்னாள் நீச்சல் வீரர் கேரி ஹால் வேதனை தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்த உதவும் நீர் பீய்ச்சி அடிக்கும் உபகரணங்கள் உரிய முறையில் செயல்படாதது குறித்தும், வழக்கமாக காட்டு தீயை அணைக்க நீர் எடுக்கப்படும் சாண்டா நீஸ் நீர்த்தேக்கத்தில் உரிய நீர்வரத்து இல்லாதது குறித்தும் உயர் மட்ட விசாரணைக்கு கலிஃபோர்னியா மாகாண மேயர் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழப்பை தவிர்க்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மின்மோட்டார்களை பயன்படுத்தி நீர் இறைத்து தீயணைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அப்பகுதி குன்றுகள் நிறைந்த பகுதி என்பதால், நிலத்தடியில் குழாய் மூலம் நீர் ஏற்ற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
பல இடங்களில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், வீடு திரும்பிய குடியிருப்புவாசிகள், தங்களது குடியிருப்புகள் கருகி சாம்பலான நிலையில் இருப்பதைக் கண்டு கண்ணீர் வடித்தனர்.
கைவிடப்பட்ட வீடுகளில் புகுந்து அங்கிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்தாக 20க்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு போடப்பட்டும், தீ கட்டுக்குள் வந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மீண்டும் தீ வைக்க முயன்ற சில விஷமிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலிபோர்னியா மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.