ஹவாய் தீவை உலுக்கிய காட்டுத்தீ – அதிகரிக்கும் மரணங்கள்
அமெரிக்காவின் ஹவாயி மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
அதற்கமைய, இதுவரையில் 53க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) ஹவாயி மாநிலத்தின் மாவீ (Maui) தீவில் பற்றியெரியும் காட்டுத் தீ மாபெரும் பேரிடர் என்று அறிவித்துள்ளார்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான அனைத்து உதவிகளும் அந்த மாநிலத்துக்கு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத் தீ பரவத் தொடங்கியது. 11,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். 80 விழுக்காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறினர். சேதத்தை மதிப்பிட முழுமையான ஆய்வு நடத்தப்படும். மீட்சிக்கான பாதை மிக நீண்டதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
“காட்டுத் தீயில் சிக்கிய மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்கிறோம். ஆனால் போதுமான உதவி கிடைத்தபாடில்லை,” என மாவீயைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
உயிருடற்சேதத்திற்கும் பொருட்சேதத்திற்கும் இடையே மக்கள் கடுந்துயரத்தில் இருப்பதாக மாவீயின் மேயர் தெரிவித்தார்.