அமெரிக்காவில் கணவனின் உயிரை பறித்த Google Maps – வழக்குத் தொடுத்த மனைவி
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது கணவரின் மரணத்துக்கு Google Mapsதான் காரணம் என்றுகூறி அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
அலிசியா என்ற பெண்ணின் கணவர் பிலிப் பெக்ஸன் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் சேதமுற்ற பாலத்தின்மீது பயணம் செய்து நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நார்த் கரோலைனாவிலுள்ள (North Carolina) அந்தப் பாலம் 9 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்துவிட்டது. ஆனால் Google Mapsஇல் அந்த விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை.
தமது கணவருக்கு அந்த இடம் புதிது என்பதால் அந்தப் பாலம் ஏற்கெனவே உடைந்த தகவல் அவருக்குத் தெரியாது என அலிசியா குறிப்பிட்டுள்ளார்.
எனவே கவனக்குறைவாகச் செயல்பட்டு தமது கணவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த Google Maps மீது நீதிமன்றத்தில் அலிசியா தற்போது வழக்குத் தொடுத்துள்ளார்.
சேதமடைந்த பாலத்தை மீண்டும் நிர்மாணிக்கத் தவறிய 3 நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பெக்ஸன் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்த Google நிறுவனத்தின் பேச்சாளர் வழக்கைப் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.