13 ஆம திருத்தத்தை ஏன் அமுல்படுத்த வேண்டும்? கூட்டமைப்புடன் அரசாங்கம் அவசர சந்திப்பு
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் பொது பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அந்த கலந்துரையாடலில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பொலிஸ் அதிகாரங்களை கோருவதற்கான காரணங்களை கேட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வின் அவசியத்தை உலகின் ஏனைய நாடுகளை உதாரணமாகக் காட்டி தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டது.
பொலிஸ் அதிகாரங்களை பிரிக்காமல் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடியதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட அதிகாரப் பகிர்வு மிகச்சிறப்பாக நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டிய தமிழர் கூட்டமைப்பினர், இதற்கான வழிமுறைகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தலாம் என விளக்கமளிக்கப்பட்டது.
இங்கிலாந்து மற்றும் இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரங்கள் முற்றிலும் வேறுபட்டவை என அமைச்சர் திரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களின் விருப்பம் குறித்து அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பியதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மாவட்டக் குழுக்களினால் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நீண்ட தூரம் கொழும்புக்கு செல்ல வேண்டியிருப்பதாலும், அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாலும் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததாக பொது பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.