இந்தியாவுடனான 7 ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?
இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்திய பிரதமர் மோடி இலங்கை வந்திருந்தவேளை ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மேற்படி ஒப்பந்தங்களுக்குள் சுகாதாரத்துறை தொடர்பான ஒப்பந்தமும் உள்ளது.
இவற்றை வெளிப்படுத்துமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம். எனினும், இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்தியாவுடன் எவ்வாறான விடயங்களுக்கு இந்த அரசாங்கம் இணங்கியுள்ளது என்பது எமக்கு தெரியாது.
தகவல் அறியும் சட்டத்தின் ஊடாகக்கூட இவற்றை பெறமுடியாமல் உள்ளது.
எனவே, சுகாதாரத்துறை தொடர்பான ஒப்பந்தம் வெளிவந்தால்தான் உண்மை என்னவென்பது தெரியவரும்.” – என்றார் முஜிபூர் ரஹ்மான் எம்.பி.





