சாரா ஜஸ்மின் எங்கே?
புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜஸ்மின் இந்தியாவில் இருக்கின்றார் என்பது தொடர்பில் எமக்கு எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்டாலும் அதனை நம்ப முடியாது. அவர் தப்பி சென்றிருக்கக்கூடும். அவர் இந்தியாவில் இருக்கின்றார் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறி இருந்தனர்.
பாதாள குழு உறுப்பினர்களுக்கு எதிராக திறந்த பிடிவிறாந்து பெறப்படுகின்றது. சாரா ஜஸ்மினுக்கு எதிராக ஏன் அந்த நடவடிக்கை இன்னும் பெறப்படவில்லை.” என்பதே முஜிபூர் ரஹ்மான் எழுப்பிய கேள்வியாகும்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. அவர் இந்தியாவில் இருக்கின்றார் என்பது பற்றி எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.” – என்றார்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேவையேற்படின் திறந்த பிடிவிராந்து உத்தரவு பெறப்படும் எனவும் அவர் கூறினார்.
சாரா ஜஸ்மின் உயிரிழந்துவிட்டார் என மூன்றாவது தடவை மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
எனினும், இந்த பரிசோதனை தொடர்பில் எதிரணி தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





