புதிய அம்சத்தை சோதனை செய்யும் WhatsApp!
வாட்ஸ்அப் நிறுவனம் தன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பல புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து கொண்டே உள்ளது. இந்நிலையில் மற்றொரு புதிய அம்சம் ஒன்றை அந்நிறுவனம் சோதித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தான் வாட்ஸ் அப்பில் Chat lock என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைப் பயன்படுத்தி நாம் விரும்பும் நபர்களின் உரையாடல்களை லாக் செய்து கொள்ளலாம். வேறு யாராலும் அந்த உரையாடலை உள்ளே சென்று பார்க்க முடியாது. அந்த சேட்டை திறந்து பார்க்க, நம் சாதனத்தில் முன்கூட்டியே போடப்பட்ட பாஸ்வேர்டைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த அம்சத்திற்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், இதற்காகவே ரகசிய பின் நம்பர் பயன்படுத்தி Chat-களை லாக் செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இது சாதாரணமாக நம் சாதனத்தில் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் போலல்லாமல், ரகசிய வார்த்தை, எமோஜி போன்றவற்றைக் கூட ரகசியக் குறியீடாகப் பயன்படுத்தலாம்.
ஒருவர் லாக் செய்து வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட சேட்டை எந்த சாதனத்தில் இருந்து பயன்படுத்தினாலும், அதற்கான ரகசிய குறியீட்டை பயன்படுத்தியே உள்ளே நுழையும்படி புதிய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் சாட் மேலும் பாதுகாப்பாக இருக்கும் என வாட்ஸ்அப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில இணையவாசிகள் இந்த அம்சம் ஏற்கனவே டெலிகிராமில் இருப்பதாகவும், புதிய அம்சம் கொண்டு வருகிறேன் என்று டெலிகிராமில் ஏற்கனவே இருக்கும் அம்சங்களை வாட்ஸ்அப் காப்பி அடித்து வெளியிடுகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வாரம்தான் டெலிகிராமில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் சேனல் அம்சத்தை, வாட்ஸ் அப் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மேலும் பல புதிய அம்சங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.