தோல்வியடைந்த சில நிமிடங்களில் விராட் கோலி செய்த செயல்
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று 1-1 என தொடரை சமன்செய்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமானால் இந்த தொடரை கட்டாயம் வெல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் இந்திய அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகான சிறிது நேரத்தில் விராட் கோலி செய்த செயல், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரிடமிருந்து பாராட்டை பெற்றுள்ளது.
அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி WTC புள்ளிப்பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்திற்கு சென்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 30வது டெஸ்ட் சதத்தை அடித்த விராட் கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சோபிக்காமல் 7 மற்றும் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
இந்நிலையில் இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்த சிறிதுநேரத்தில் வலைப்பயிற்சிக்கு சென்ற விராட் கோலி, அடுத்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு உழைக்க தன்னை தயார்படுத்த தொடங்கினார்.
இதனை பாராட்டிய இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கர், “விராட் கோலியின் இந்த செயல் அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. இந்தியாவிற்காக இதுவரை அவர் என்ன செய்தாரோ, அதையே மீண்டும் செய்ய நினைக்கிறார். அடுத்த போட்டியில் ரன்கள் அடித்து சதத்தை எடுத்துவந்தாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அவர் இந்த போட்டியில் ரன்களை அடிக்கவில்லை, ஆனால் வலைப்பயிற்சியில் தொடர்ந்து உழைக்கிறார், வியர்வை சிந்துகிறார். நீங்கள் தொடர்ந்து உங்களை தயார்படுத்தி களத்தில் தோல்வியை சந்தித்தால் பிரச்னை இல்லை. விராட்டை போலவே, அவரை பின்பற்றி இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்” என்று பாராட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 14-ம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவிருக்கிறது.