இந்திய அணிக்குள் நடப்பது என்ன? முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதில் ருத்ராஜ் இடம்பெறாதது பற்றியும், கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படாதது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அணியில் அந்த வீரர் இடம்பெறவில்லை இந்த வீரர் இடம்பெறவில்லை என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தன்னுடைய யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “இலங்கை அணிக்கு எதிரான டி20 அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது ஆச்சரியமாக இருக்கிறது. உலகக் கோப்பையில் அவர் அணிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார், இதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. ஆனால் டி20 போட்டிகளில் அவர் பெயர் இல்லை என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து குறைவாக சுழல்கிறது, இது சில சமயங்களில் குல்தீப்பின் பந்து வீச்சு விதத்திற்கு பொருத்தமாக இருக்காது. இதனை காரணம் காட்டி அவரை அணியில் எடுக்காமல் இருந்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். யுஸ்வேந்திர சாஹலும் இதேபோல டி20 அணியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார். அவர் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் என்பதால் எனக்கு இதுவும் ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது.
அதைப்போல ரவீந்திர ஜடேஜா, ஒருநாள் போட்டிகளில் கூட விளையாட இடம்பெறவில்லை என்பது பற்றிய கேள்வியும் வரலாம். அவர் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் என்றாலும், ஒருநாள் போட்டிகளில் அவருடைய பெயர் இடம்பெற்று இருக்கலாம். இந்திய அணியில் என்னதான் நடக்கிறது என்று ஒண்ணுமே புரியவில்லை” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும். இந்திய அணி வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள டி20 போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான இந்திய அணி
டி20
சூர்யகுமார் யாதவ் (c), சுப்மன் கில் (vc), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (wk), சஞ்சு சாம்சன் (wk), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமது. சிராஜ்.
ஒரு நாள்
ரோஹித் சர்மா (c), ஹுப்மன் கில் (vc), விராட் கோலி, கேஎல் ராகுல் (wk), ரிஷப் பந்த் (wk), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.