தினமும் 7 மணி நேரம் உறங்கவில்லை என்றால் உடம்பில் ஏற்படும் பாதிப்பு
மனிதராக பிறக்கிறோமோ, ஐந்தரிவு ஜீவனாக பிறக்கிறோமோ, எதுவாக பிறந்தாலும் நாம், நமது உடலுக்கு தேவையான அளவு கண்டிப்பாக உறங்க வேண்டும். அப்படி நாம் தினமும் உறங்கவில்லை என்றால் என்ன ஆகும் என எப்போதாவது யோசித்ததுண்டா?
1.மூளை திறன் பாதிப்பு:
குறைவான தூக்கம் இருப்பது, நமது மூளை திறனை பாதிக்க செய்யலாம். இதனால், கவனச்சிதறல் அதிகமாக ஏற்படலாம். இதனால் முடிவெடுக்கும் திறன் குறையலாம், பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தடுமாறலாம்.
மூளை திறன் பாதிக்கப்பட்வதால், ஒரு விஷயத்தை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுவோம். இது, பல விஷயங்களை நம் நினைவில் இருந்து மறக்க செய்துவிடும். ஒரு வீஷயத்தை செய்து முடிக்க 10 நிமிடம் ஆகும் என்றால், சரியாக உறங்காதவர்களுக்கு அதை செய்து முடிக்க 20 நிமிடங்கள் எடுக்கலாம்.
2.நோயெதிர்ப்பு திறன் குறைவது:
சரியாக உறங்காதவர்களுக்கு நோயெதிர்ப்பு திறன் குறைந்து போகலாம். இப்படி குறைவாக தூங்குவதால், நம் உடல் நோய் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் திறனை இழக்கின்றன. இதனால், சளி-காய்ச்சல் ஆகியவை உடனே வந்துவிடலாம். இந்த நோய் பாதிப்புகள் வந்தாலும் இதிலிருந்து மீண்டெழ பல நாட்கள் பிடிக்கலாம்.
3.நாள்பட்ட நோய் பாதிப்புகள்:
வயதானவர்களுக்கு பல நாள் நோய் பாதிப்பாக இருக்கும் இதய நோய் பாதிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம். அதிக தூக்கம் இல்லாததால் நம் உடலில் இன்சுலின் அளவும் அதிகரிக்கலாம். இதனால், டைப் 2 டயாபட்டீஸ் வர வாப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே போல, தூக்கமின்மை நம் உடல் எடை அதிகரிப்பிற்கும் காரணமாக அமைகிறது.
4.உணர்ச்சியில் உறுதியற்று இருத்தல்:
ஒருவர் சரியாக தூங்கவில்லை என்றால் அவர்களுக்கு எதை பார்த்தாலும் எரிச்சலாக இருக்கும். இதனுடன் பதற்றம், மன அழுத்தம் ஆகியவையும் ஒட்டிக்கொள்ளும். அதே போல சரியாக தூங்கவில்லை என்றால் நம் மனதில் ஏற்படும் பாதிப்புகளையும் எப்படி சரிசெய்து கொள்ள வேண்டும் என்று தெரியாது.
5.செயல்திறன்களில் குறைபாடு:
இரவில் சரியாக உறக்கமில்லாததால், காலையில் சோர்வுடன் காணப்படுவீர்கள். இதனால், உடலால் செய்ய வேண்டிய விஷயங்கள் மிகவும் கடினமாக தோன்றும். கவனமற்று அதே போல ஏதேனும் வேலையை செய்யும் போது விபத்துகள் கூட ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
6.வயதான தோற்றம்:
இரவில் சரியாக உறக்கம் இல்லாதவர்களுக்கு கண்களுக்கு கீழ் கருவளையம், சருமம் பொலிவிழத்தல், முகத்தில் சுருக்கம் விழுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதே போல, சரியாக தூக்கம் இல்லாததால், மன அழுத்தம் ஏற்பட்டு முடிக்கொட்டுவதும் அதிகரிக்கலாம்.
7.ஹார்மோன் மாற்றங்கள்:
பசி உணர்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது, ஹார்மோன். இரவில் சரியாக உறங்கவில்லை என்றால், அந்த பசியெடூக்கும் ஹார்மோனும் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். இது, குறைவாக அல்லது அதிகமாக சாப்பிட வழிவகுக்கும்.
8.உடலுறவு கொள்வதில் பிரச்சனை:
குறைவான உறக்கம், ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துவதால், உடலுறவு கொள்வதும் சிக்கலாகி விடுகிறது. அதே போல, குழந்தை பெற்றுக்கொள்வதிலும் இதனால் சிக்கல் நிலவுவதாக சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
9.ஆயுள் குறையுமா?
நன்றாக உறங்குபவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், குறைவாக தூங்குபவர்களுக்கு ஆயுள் குறைவாக இருக்குமாம். ஆனால், இதை நிரூபிக்கும் சான்றுகள் குறைவாகவே இருக்கின்றன.