வெலிகம பிரதேச சபை தவிசாளர் படுகொலை: ரூ. 20 லட்சம் கொலை ஒப்பந்தம் ; யார் இந்த டுபாய் லொக்கா?
வெலிகம பிரதேசசபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
குறித்த கொலை திட்டத்தை அரங்கேற்றுவதற்காக 20 லட்சம் ரூபா பேரம் பேசப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர, பிரதேச சபைக்குள் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
இக்கொலை சம்பவமானது ஒட்டு மொத்த இலங்கையையும் உலுக்கியது. இது தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நடந்த முதலாவது அரசியல் படுகொலையென எதிரணிகள் குற்றஞ்சாட்டின. தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் கேள்விகளை எழுப்பின.
இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்வதற்காகவும், சம்பவம் தொடர்பான விசாரணை வேட்டைக்காகவும் 4 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதற்கமைய கெக்கிராவ பகுதியில் பாழடைந்த வீடொன்றில் பதுங்கி இருந்த நிலையில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
பிரதான துப்பாக்கி தாரியின் மனைவி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அடைக்கலம் வழங்கியோரே இவ்வாறு பிடிபட்டனர். இதற்குரிய கைது வேட்டையை பொலிஸார் அரங்கேற்றும்போது, பிரதான துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கை அதன்பின்னர் ஆரம்பமானது.
அவர் கெக்கிராவையில் இருந்து கொழும்புக்கு வந்து பொரளை பகுதியில் பதுங்கியுள்ளார். அதன்பின்னர் அங்கிருந்து மஹரகம, நாவின்ன பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்பகுதியில் வைத்தே அவரை பொலிஸார் கைது செய்தனர். விசேட அதிரடிபடை, புலனாய்வுப் பிரிவு என்பனவும் இதற்கு உதவி இருந்தன.
மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
டுபாய் லொக்கா என்பவரே கொலை ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் எனவும், இதற்காக 20 லட்சம் ரூபா பேரம் பேசப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.





