தமிழர் பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதிக்கு வரவேற்பு!
வடமாகாண ‘பொங்கல் விழா’ இன்று யாழ். வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது வரவேற்புரை நிகழ்த்திய வடக்கு மாகாண ஆளுநர், நாட்டின் தலைவர் எம்முடன் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாடுவது எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது என குறிப்பிட்டார்.
சாதாரண மக்களின் வலிகளை நன்கு தெரிந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றமையால்தான், இந்த இழப்பீடுகள் அனைத்தும் இவ்வளவு வேகமாக மக்களை வந்து சேர்ந்திருக்கின்றன எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில், அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.





