மக்களுக்காக வீரியத்துடன் செயற்பட உள்ளோம் – இலங்கை ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து
தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டு உதயத்துடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த பரிமாற்ற ரீதியான அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக நாடென்ற ரீதியில் 2024ஆம் ஆண்டில் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் விட்டுக்கொடுக்க முடியாத பாரிய பொறுப்பு அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளதெனவும் அந்தப் பொறுப்பு குறித்து புரிந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.