ட்ரம்பின் அறிவிப்புக்கு அடிபணிய மாட்டோம்: கடும் கோபத்தில் கனடா பிரதமர்
அடுத்த மாதம் முதல் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு 25 சதவீதம் வரிவிதிப்பு அமல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பிற்கு கனடா அடிபணியாது என்று கனடா பிரதமர் அறிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் புதியதாக பதவியேற்ற டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% அமெரிக்க அரசு வரிகளை அறிமுகப்படுத்துவது பற்றி யோசித்து வருகிறது என்றார்.
டிரம்ப் இவ்வாறு கூறியதற்கு காரணம், மேற்கண்ட இரு நாடுகளின் வழியாக அமெரிக்காவிற்குள் பலர் சட்டவிரோதமாக குடியேறி வருவதாகவும், அவர்களை இரு நாடுகளும் தடுக்க தவறிவிட்டதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.
இந்நிலையில் டிரம்பின் அறிவிப்பு குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பேட்டியில், “புதியதாக பதவியேற்றுள்ள டிரம்ப் தனது வர்த்தக கூட்டாளிகளிடையே பொருளாதார நிச்சயமற்ற தன்மையை உருவாக்க முயற்சிக்கிறார்.
மற்ற நாடுகளை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்கிறார்கள். டிரம்பின் அறிவிப்புக்கு கனடா அடிபணியாது. புதிய வரிவிதிப்பை ஏற்க மாட்டோம். உண்மையில் டிரம்ப் ஒரு திறமையான பேச்சாளர். அவர் இவ்வாறு அறிவிப்பார் என்பது எங்களுக்கு தெரியும். தனது வர்த்தக கூட்டாளர்களை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக எதையும் செய்வார் என்று கூறினார்.
டிரம்ப் கடுமையான வரிகளை விதித்தால், அதற்கான இழப்பீட்டை கனடா அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜவுளிப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதிக்க கனடா அரசு யோசித்து வருகிறது.
இருப்பினும், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு கனடாவின் பதிலடியானது கனடாவிற்கு தேவையற்ற பொருளாதாரச் சுமையாக மாறிவிடும் என்கின்றனர். அதேநேரம் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பா கூறுகையில், ‘அமைதியான முறையில் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும். வார்த்தை ஜாலங்களை கண்டு ஏமாற வேண்டாம். ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட உத்தரவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் முக்கியம்’ என்றார்.