அரசியல் நோக்கத்துக்காக இனவாதத்தை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தேசிய பாதுகாப்புக்கு பிரஜைகளை பொறுப்புக்கூறும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தயார் என அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எந்தவொரு அரசியல் நோக்கத்துக்கவும் இனவாதத்தை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த தருணத்தில் இனவாதம் இரத்தம் சிந்தும் மோதலாக மாற இடமளிக்காமல் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டவுடன் இனவாதத்தை தோற்கடிக்க முடியாது எனவும் தற்போதுள்ள ஒவ்வொரு சட்டத்தின் கீழும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொலிஸ் விசாரணைகளின் படி தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டு எதிர்காலத்தில் சட்டம் அமுல்படுத்தப்பட்டு புதிய சட்டங்கள் தயாரிக்கப்படும் அல்லது இனவாதம் தோற்கடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை ஊக்குவிக்க இந்த அரசாங்கம் இடமளிக்காது என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.