நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணிவிப்போம்: சாமர எம்.பி. எச்சரிக்கை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணியவேண்டிய நிலை (சிறை தண்டனை) ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
“ மண்சரிவு அனர்த்தம் பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை. ஆனால் படிப்படியாக நீரை திறந்திருந்தால் பாரிய வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டிருக்காது. இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு பொறுப்பு கூறவேண்டும்.
பன்னலயில் முதியவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். இப்படியான துயர் சம்பவங்கள் சில இடம்பெற்றுள்ளன.
எனவே, நீர்பாசனத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் உரிய வகையில் செயல்பட்டிருந்தால் அனர்த்தங்களை குறைத்திருக்கலாம்.
கொரோனா காலத்தைவிட தற்போது மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் சிறப்பாக கையாள வேண்டும்.
நீர்பாசனத்துறை அமைச்சருக்கு நிச்சயம் ஜம்பர் அணிய வேண்டிவரும். அதனை நாம் செய்வோம்.” எனவும் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.




