சிறுநீரில் இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம்
இந்த அவசர காலத்தில் மனிதர்களை பாதிக்கும் வாழ்க்கை முறை நோய்களில் அதிக யூரிக் அமில பிரச்சனையும் ஒன்றாகும். சமீப காலங்களில் இது பரவலாக பலரிடம் காணப்படுகின்றது. சில உணவுகள் மற்றும் இறந்த உயிரணுக்களில் காணப்படும் பியூரின்களை உடல் உடைக்கும்போது உருவாக்கப்படும் ஒரு கழிவுப் பொருள்தான் யூரிக் அமிலம். யூரிக் அமிலத்தின் பெரும்பகுதி இரத்தத்தில் கரைந்துவிடுகிறது. மீதமுள்ளவை சிறுநீரகங்களுக்குச் சென்று உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.
சில சமயம், சில காரணங்களால் உடலால் யூரிக் அமிலத்தை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது ஒரு பொதுவான நிலை. பலருக்கு இது ஏற்படக்கூடும். ஆனால், யூரிக் அமில அளவு மிகவும் அதிகமானால், அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக, மூட்டு வலி, சிறுநீரக கல் பிரச்சனை என பல வித பிரச்சனைகள் ஏற்படலாம்.
யூரிக் அமில அளவு அதிகமானால், உடல் நமக்கு சில அறிகுறிகளை காட்டும். இவற்றின் புரிதல் மிக அவசியமாகும். இதன் மூலம் இதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தி எந்த வித உடல் உபாதைகளும் ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்ளலாம். இதற்கு அதன் அறிகுறிகளை அடையாளம் காண்பது மிக முக்கியம். இந்த பிரச்சனை நீண்ட காலத்திற்கு புறக்கணிப்பதால் மூட்டுவலி மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால், சிறுநீரில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிறுநீரில் தெரியும் யூரிக் அமிலத்தின் அறிகுறிகள்
– ஆரோக்கியமான நபரின் சிறுநீரில் ஒரு சாதாரண வாசம் இருக்கும். அது ஃப்ளஷ் செய்தவுடன் போய்விடும். ஆனால் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் சிறுநீரில் கடுமையான வாசம் ஏற்படும். இந்த அறிகுறி நீரிழிவு நோயிலும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், சிறுநீரின் நிறம் அடர் நிறமாக மாறும். ஆரோக்கியமான நபரின் சிறுநீர் பொதுவாக மஞ்சள் நிறமாக இருக்கும், ஆனால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்திருந்தால், அதன் நிறம் அடர் மஞ்சள் அல்லது அடர் பழுப்பு நிறமாக மாறும். நீரிழப்பு மற்றும் சிறுநீரக நோய் காரணமாகவும் இப்படி நிறம் மாறலாம்.
– சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உணர்வு எற்பட்டால், அது யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டாலும் அல்லது சிறுநீரக கற்கள் காரணமாகவும் இந்த உணர்வு ஏற்படக்கூடும்.
– சிறுநீரில் நுரை இருப்பது அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறியாக இருக்கக்கூடும். சிறுநீரகங்களால் உடலில் இருந்து நச்சுகளை சரியாக அகற்ற முடியவில்லை என்பதையும், அதிகப்படியான புரதம் அதில் குவிந்து கிடப்பதையும் சிறுநீரில் உள்ள நுரை குறிக்கிறது.
– யூரிக் அமிலம் அதிகரித்தால், சிறுநீரின் அளவு குறைவதைக் காணலாம். வழக்கத்தை விட குறைவாக சிறுநீர் கழித்தால், அதை ஒரு எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக்கொள்வது நல்லது. இது சிறுநீரகத்தின் செயல்பாட்டில் உள்ள தடையைக் குறிக்கிறது. இதன் காரணமாக யூரிக் அமிலம் சரியாக வெளியேற முடியாமல் போகிறது.