அமெரிக்கா – சீன ஜனாதிபதிகளின் 100 நிமிட சந்திப்பு பலனளித்ததா?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ட்ரம்ப் பெய்ஜிங் (Beijing) செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்பின் ஆசிய சுற்றுப்பயணத்தின்போது இரு நாட்டு தலைவர்களும் தென்கொரியாவில் சந்தித்துக் கொண்டனர். இதன்போது வரி விதிப்பு, கனிய வளங்கள் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீன ஜனாதிபதியுடனான சந்திப்பை அற்புதமானது என ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதேபோல் அமெரிக்காவின் சோயாபீன்களை மீளவும் கொள்வனவு செய்ய ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தொழில்நுட்பத்திற்கு முக்கியமான அரிய மண் தாதுக்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நிறுத்தி வைக்கவும் பெய்ஜிங் ஒப்புக் கொண்டுள்ளது.
மொத்தமாக 100 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்படவில்லை என்பதையும் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
அதேநேரம் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து சீன பங்குகள் 10 ஆண்டு உச்சத்தை எட்டியதாகவும், அமெரிக்க டொலருக்கு நிகரான யுவானின் பெறுமதி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.





