மூளையில் சிப் பொருத்தும் மஸ்கின் திட்டம் வெற்றியளித்ததா? இளைஞரின் நெகிழ்ச்சி அனுபவம்!
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கின் மூளையில் சிப் பொருத்தும் செயற்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் அதன் செயற்பாடுகள் குறித்து பேசியுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த செபாஸ்டியன் கோம்ஸ் பெனா (Sebastian Gomez-Pena) என்ற இளைஞர், நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்பை பொருத்திக் கொண்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து மட்டும் 07 பேர் இந்த சாதனத்தை பொருத்திக் கொண்டனர்.
செபாஸ்டியன் கோம்ஸ் பெனா (Sebastian Gomez-Pena) விபத்தொன்றில் சிக்கியதில் அவரது கழுத்து பகுதியில் இருந்து கீழ் பகுதி உடல் செயலிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மஸ்கின் சிப்பை தன்னார்வமாக பொருத்திக் கொண்ட அவர், இது “மாயாஜாலமாக இருக்கிறது என்றும், கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை இது மாற்றும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“உங்கள் வாழ்க்கையில் இது ஒரு பெரிய மாற்றமாகும். எனது நிலையில் உள்ள அனைவரும் ஏதேனும் மீட்பு இருக்கிறதா என்று பார்க்க தங்கள் உடலின் ஒரு பகுதியை நகர்த்த முயற்சிக்கிறார்கள், ஆனால் இப்போது நான் என் கையை நகர்த்துவது பற்றி நினைக்கும் போது… உண்மையில் ஏதோ நடக்கிறது என்பதைப் பார்ப்பது அருமையாக இருக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
அவரது மூளையில் பொருத்தப்பட்ட 1,024 மின்முனைகளுடன் இணைக்கப்பட்ட நியூராலிங்க் சிப் 05 மணிநேர அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




