இலங்கையில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர், வைத்தியர் பெர்னாண்டோ எச்சரிக்கின்றார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்;
“சமூகத்தில் பலர் தற்போது சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்கு போதிய விளக்கம் அல்லது அறிவுரைகள் இல்லாததால், மக்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்குப் பதிலாக தரமற்ற கிரீம்களை பயன்படுத்தி, அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
தோலை வெண்மையாக்கும் கிரீம்களில் தரமற்ற இரசாயனப் பொருட்கள், பாதரசம், ஸ்டீரோயிட் போன்ற விஷகரமான பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால், அவை தொடர்ந்து பயன்படுத்தும் நிலையில் நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சார்ந்த நோய்களுக்கான அபாயங்களை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதோடு, 12 மற்றும் 13 வயதினரான மாணவர்களும் இத்தகைய கிரீம்களை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் அதிகமாக இணையதளங்களில் எளிதில் பெறப்படும் இந்த கிரீம்களை வாங்கி, பின்னர் வைத்தியசாலைகளுக்கு வந்தபோது அதைப் பற்றி தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, பெண்களுடன் மட்டுமே இல்லை, இளைஞர்களும் இந்த கிரீம்களை பயன்படுத்தி வரும் நிலையில், இது சமுதாயத்தில் ஒரு பெரிய சுகாதார பிரச்சனையாக மாறி உள்ளது” என அவர் தெரிவித்தார்.